நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த 2020 – ஆம் ஆண்டு, கவிஞர் ஆத்மாநாம் பெயரிலான விருது எனக்கும் (கவிதைக்கு…) பதிப்பாளர் சந்தியா நடராஜனுக்கும் (கவிதை மொழிபெயர்ப்பு) அறிவிக்கப்பட்டது. எனினும் கடந்த நான்காண்டுகளாக விருது தரப்படவில்லை. இதையொட்டி நான் நேற்று (27.05.2024): ‘கட்டுச் சோற்று மூட்டையில் வைத்துக் கட்டியப் பெருச்சாளி…: எனக்கு அறிவிக்கப்பட்ட கவிஞர் ஆத்மாநாம் விருது’ என்கிற தலைப்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தேன். அதில், தெளிவாகவே எனது கருத்துக்களைச் சுட்டி இருந்தேன், அதில், அறக்கட்டளைக்கு வசதியான பின் வரும் கருத்தும் இடம்பெற்றிருந்தது:
என்னால் உங்களுக்குத் தொல்லை என்று உணர்ந்தாலோ, ஒருவேளை, விருதினை அளிக்க இனி உவப்பில்லை என்று எண்ண நேர்ந்தாலோ, மன்னிப்புக் கோருதலுடன் கூடிய உரிய காரணங்களை எழுத்துப் பூர்வமாகக் கூறிவிட்டு விருதினைத் ‘தாங்களாக’ தாராளமாகத் திரும்பப் பெற்றுக் கொள்க. அது நிச்சயம் தாமத்தினை விடவும் சிறந்த செயலாக இரு தரப்புக்கும் இருக்கும் அல்லாவா?
இவ்வளவு வெளிப்படையாக அறக்கட்டளைக்கு நான் வசதி ஏற்படுத்தித் தந்த பின்பும், அறக்கட்டளையிடமிருந்தும் அதன் நிறுவனரான சீனிவாசன் நடராஜன் அவர்களிடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை. கூடுதலாக, அவர் என்னையும் எனக்கு ஆதரவாக நின்றவர்களையும் தனது முகநூல் பக்கத்திலிருந்து ப்ளாக் செய்துவிட்டார்.
’கவிதைக்கு மாத்திரம் ஏன் இவ்வளவு பெரிய பரிசுத் தொகை?’ என்ற கல்கி பத்திரிக்கை எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீனிவாசன் நடராஜன்:
‘…… தமிழகத்தில் கவிஞைக் கொண்டாடுவது இல்லை. …… மேலும் தன் சொந்தப் பணத்தைப் போட்டே ஒரு கவிஞன் நூலைப் பதிப்பிக்கிறான். அதுவும் கணிசமான விற்பனை இன்றி அவதிப்படுகிறான். ஆகவே, கணிசமான விற்பனை இன்றி அவதிப்படுகிறான். ஆகவே, கிடைக்கும் பரிசுத் தொகை அவனையும் கவிதையையும் பெருமிதப்படுத்துவதாக இருக்க வேண்டியே ஒரு லட்சமாக அறிவித்தோம்.’
என்று கூறியிருக்கிறார். ஆனால், முதல் பதிப்பினை சொந்தப் பதிப்பாகக் கொண்டுவந்த என்னையும் என் கவிதையையும் பெருமிதப்படுத்தும் லட்சணமோ வெறும் பத்திரிக்கைக்குப் புகைப்படத்துடன் பேட்டி கொடுப்பதோடு நின்றுவிட்டது.
இவ்வளவு நடந்த பிறகும் குறைந்தபட்சம் என்னிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்கிற அடிப்படை அறஉணர்வு கூட இல்லாமல் செயல்பட்டதோடு என்னை ப்ளாக்கும் செய்த சீனிவாசன் நடராஜனையும் அவருடைய சகாக்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தற்கொலை செய்து கொண்டு இறந்த ஆத்மாநாமின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு விருதமைப்பு இதைவிடவும் ஆத்மாநாமை கீழ்மைப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது.
எனவே, எனக்கு அளிக்கப்பட்ட விருதினை – மன்னிக்கவும் அறிவிக்கப்பட்ட விருதினை ’இனியும் அது வேண்டியதில்லை’ என்று மன உறுதியுடன் மறுக்க விழைகிறேன்.
சொல் வெளித் தவளைகள் நூலின் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றுள்ள ஆத்மாநாம் விருது பெற்ற நூல் என்கிற இலச்சினை அந்நூலின் இருப்பு தீரும் வரை – வாங்கி எரிக்க என்னிடம் பணம் இல்லை – இடம்பெறும். அடுத்த பதிப்பு சாத்தியப்படும் பட்சத்தில் அதை நீக்கிவிடுவேன்.
மேலும், என்னோடு துணை நின்ற, நிற்கும் – உண்மையான நண்பர்கள் – அனைவருக்கும் எனது நன்றிகளை உளப்பூர்வமாகக் காணிக்கை ஆக்குகிறேன்.
ஆத்மாநாமுக்கு எனது அஞ்சலி!
நன்றியும் அன்பும்
றாம் சந்தோஷ்
28.05.2024
Leave a comment