இன்று crush day என்று கேள்விப்பட்டேன். ஆனால், அப்படி ஒரு நாள் இருப்பதாக – அதுவும் மே 31-ம் தேதி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இணையத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அதன் பொருட்டு எனது க்ரஸ்களை நினைத்துக் கொண்டேன். கூகுளில் அச்சொல்லின் வினையடிக்கே மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. அதாவது, நொறுக்கு, கசக்கு, பிழி என்பது போல – இரட்டை அர்த்தம் கிடைத்தாலும் – இச்சொல்லுக்கும் அதே வார்த்தையின் பெயர்ச் சொல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனது கவிதை ஒன்றில் கனவாளன் என்கிற வார்த்தையை க்ரஸ் என்கிற வார்த்தைக்கு நிகராகப் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால், பழைய சொல் போல் பட்டது. கனவினன் என்றும் பயன்படுத்திய நினைவு. இது கொஞ்சம் தேவலாம். ஆனால், இது பெண்களைச் சுட்ட என்று வரும்போது பால்விகுதி மாற்றிச் சொல்ல வேண்டி வரும். எனினும் ஒரு வார்த்தைக்கு ஈடாக ரெண்டு வார்த்தை என்பது உதவாது. வார்த்தைகளில் சிக்கனமானதே பயன்பாட்டில் நிலைபெறும் என்பது அடிப்படையான மொழியியல் விதி. இருக்கட்டும்.
crush என்கிற வார்த்தையும் சரி; அதன் அர்த்தம், உறவுநிலையும் சரி எனக்குப் பிடித்தமானவை. அது காதல் இல்லை (அதற்கான சாத்தியம் உண்டு). அந்த உறவில் ஏற்படும் நெருக்கம் என்பது ஒரு கருது நிலை. அதில் நிரந்தர நெருக்கமோ, பிரிவோ கிடையாது என்பதால், எப்போது நினைத்துப் பார்த்தாலும் குளிர்ச்சியைத் தருவது.
ஒருவரை அல்லது ஒருவருக்கு அதிகமானவரைக் காதலன் / காதலி என்று வெளியில் சொல்லிக் கொள்வதில் அதற்கே உரிய சமூக தளைகள் உள்ளது. ஆனால், தன் இணையரிடமோ, பொதுவெளியிலோ கூட நாம் ஒருவரை க்ரஸ் என்று சொல்லும் போது அது தகாத ஒன்றாகவோ, ஒழுக்க மீறலாகவோ நினைக்கப்படுவதில்லை என்பது ஒரு நல்ல தோதுத்தன்மை.
பொதுவாக நமக்கு க்ரஸ் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது சினிமா நடிகர்கள்தான். அப்படி சினிமா நடிகர்களில் எனக்கு க்ரஸ் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது தேவ் மோகனும் – தீபிகா படுகோனேவும் தான். இருவரும் அழகின் திருவுருக்கள். தேவ் – இடம் ஒரு சிட்டிகைப் பெண்மை இருக்கும். ஒரு சிட்டிகைப் பெண் தனம் இருக்கும் ஆண்களே உலகின் வசீகரமானவர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. படுகோனேவின் அடர்ந்த புருவமும், கண்களும் யாரையும் சுண்டி இழுக்கம் காந்தத் தன்மை கொண்டவை. வேறு யாரையும் எனக்கு உடனடியாகச் சொல்லத் தோன்றவில்லை.
சினிமாவைத் தாண்டி என்றால், இங்கும் நிறைய க்ரஸ்கள் உண்டு. ஆனால், நான் அதை வெளியே சொல்லி அந்தரங்கத்தின் அழகினை குலைக்க விரும்பவில்லை.
– றாம் சந்தோஷ்

All reactions:
1Ram Santhosh
Leave a comment